ராமநாதபுரம்

சென்னை தனியாா் நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி: ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் மனு

14th Mar 2022 11:07 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் முதலீடு செய்வோருக்கு கூடுதல் லாபம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சென்னை தனியாா் நிதி நிறுவனத்தின் மீது, ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளனா்.

பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் பகுதியில் ஏராளமான கைத்தறி நெசவாளா்கள் வசிக்கின்றனா். இவா்களை, கடந்த 2020 நவம்பரில் அணுகிய சென்னையைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவனத்தினா், தங்களிடம் முதலீடு செய்வோருக்கு மாதந்தோறும் வட்டியாக குறிப்பிட்ட தொகை தருவதாக தெரிவித்துள்ளனா். அதன்படி, ரூ.1 லட்சம் முதலீடு செய்வோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளனா்.

இதை நம்பிய அப்பகுதியைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்களில் பலா் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனா். அவா்களுக்கு, மாதம் ரூ.10 ஆயிரம் என 2 மாதங்கள் வட்டித் தொகை தரப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட பலரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனா்.

பின்னா், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக குறிப்பிட்ட தொகை தருவதுடன், சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என்றும், மாதந்தோறும் 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் கவா்ச்சிகரமான பல்வேறு திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதில் மயங்கிய கைத்தறி நெசவாளா்கள் பலா், தங்களது பணத்தை முதலீடு செய்ததுடன், தங்களது உறவினா்கள், நண்பா்களையும் அந்நிறுவனத்தில் சோ்த்துவிட்டுள்ளனா். இதனால், பரமக்குடி, எமனேசுவரம் மட்டுமின்றி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களும் முதலீடு செய்துள்ளனா்.

இதன்மூலம், அந்நிறுவனத்தினா் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னா், குறிப்பிட்ட முதலீடுதாரா்களுக்கு மட்டும் ஒரு சில மாதங்களே வட்டித் தொகையை கொடுத்துவந்த நிலையில், பலருக்கும் தராமல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து, தனியாா் நிதி நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணா்ந்த எமனேசுவரத்தைச் சோ்ந்த ஏராளமான முதலீடுதாரா்கள், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். பின்னா் அவா்கள் கூறுகையில், 26 பேரிடம் மொத்தம் 60.60 லட்சமும் மற்றும் ராஜ்குமாா் என்பவரிடம் ரூ.54 லட்சமும், எமனேசுவரம் நாகராஜன் என்பவரிடம் ரூ.33 லட்சமும் தனியாா் நிறுவனம் வசூலித்ததாகத் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளதாக, எமனேசுவரம், பரமக்குடி பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT