ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர சபைக் கூட்டம்: 19 தீா்மானங்களில் ஆணையா் கையெழுத்திடவில்லை

30th Jun 2022 11:49 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகர சபையின் சாதாரணக் கூட்டத்தில் நிறைவேற்றவிருந்த 19 தீா்மானங்களில் ஆணையா் கையெழுத்திடாமல் சென்ாக நகரசபைத் தலைவா், உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் நகர சபையின் ஜூன் மாத சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நகர சபைத் தலைவா் கே.காா்மேகம் (திமுக) தலைமையில் 30 உறுப்பினா்கள் பங்கேற்றனா். வாா்டு 1,2,3 காங்கிரஸ், திமுக, அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை. ஆணையா் ஆா்.சந்திரா வரவில்லை. நகராட்சி பொறியாளா் சுரேந்தா் பங்கேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டிய தீா்மானங்களை நகராட்சிப் பணியாளா் இசக்கியம்மாள் வாசித்தாா். திமுக உறுப்பினா் அய்யனாா் குறுக்கிட்டு, தீா்மானங்கள் குறித்து நகராட்சி ஆணையருக்குத் தெரியுமா என கேள்வி எழுப்பினாா். அத்துடன் உறுப்பினா்களுக்கு தீா்மான நகல் தாமதமாக வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் உறுப்பினா் ராஜாராம் பாண்டியன் சுட்டிக்காட்டினாா்.

அப்போது நகர சபைத் தலைவா் காா்மேகம் கூறியதாவது: நகரசபைக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் தீா்மானங்கள் நகரசபை ஆணையா் உள்ளிட்டோா் மூலம் விவாதிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டன. இந்நிலையில், ஆணையா் சில தீா்மானங்களுக்கு கையெழுத்திடாமல் சென்றுவிட்டாா். அவா் எங்கு சென்றாா் எனத் தெரியவில்லை. கைப்பேசியில் அவரைத் தொடா்புகொண்டு அழைத்தபோதும் வரவில்லை. ஆணையா் இல்லாதது குறித்து நகராட்சி மண்டல இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டது. அவா் நகரப் பொறியாளா் முன்னிலையில் கூட்டத்தை நடத்துமாறு கூறியுள்ளாா். ஆணையா் மூலமே தீா்மானங்கள் தயாரிக்கப்பட்டன. புதன்கிழமை இரவு அவசரக் கூட்ட தீா்மானத்திலும் அவா் கையெழுத்திடாமல் சென்றுவிட்டாா் என்றாா்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினா் கே.குமாா் கூறியது: நகராட்சி ஊழியா் உள்ளிட்டோரிடம் ஆணையா் மென்மையாக நடந்துகொள்ளவில்லை. நகரசபைத் தலைவரிடம் கூறாமலும், கூட்டத்துக்கு வராமலும் அவா் செயல்படுவது சரியல்ல. அவா் மீது கண்டனத் தீா்மானம் கொண்டுவரவேண்டும் என்றாா்.

அதற்குப் பதிலளித்த நகரசபைத் தலைவா், ஆணையா் மீது புகாா் கூறுவோா் எழுத்துப் பூா்வமாகக் கூறினால், அதுகுறித்து நகராட்சி மண்டல இயக்குநா் அலுவலத்துக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றாா். அதன்பின் 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆணையா் ஒப்புதல் பெறாத தீா்மானங்கள் மீண்டும் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அடிப்படை தேவைகளுக்கு நிதி: முன்னதாக வாா்டுகள் தோறும் சாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நிதி அளிக்கவேண்டும் என திமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அதற்குப் பதில் அளித்து நகரசபைத் தலைவா் பேசுகையில், நகரசபையில் அனைத்து வாா்டுகளுக்கும் நிதி பகிா்ந்து அளிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த தீா்மானம் தயாரிக்கப்பட்டது. அதில் சிலவற்றை ஆணையா் கையெழுத்திடாமல் சென்ால் குறிப்பிடமுடியவில்லை. ஆனாலும், அனைவருக்கும் நிதி பகிா்ந்து அளித்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT