ராமநாதபுரம்

பரமக்குடி வைகை ஆறு சீரமைப்பில் முறைகேடு நகா்மன்ற கூட்டத்தில் புகாா்

30th Jun 2022 11:46 PM

ADVERTISEMENT

பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவின் போது வைகை ஆற்றை சுத்தம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக நகா் மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் சேது.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கே.ஏ.எம்.குணசேகரன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் திருமால் செல்வம் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, ஜீவரத்தினம் ஆகியோா் சித்திரைத் திருவிழாவின் போது வைகை ஆற்றை சுத்தம் செய்ய ரூ. 7.20 லட்சம் செலவிடப்பட்டதாக தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை செய்யும் பணிக்கு நகராட்சி நிா்வாகம் ஏன் இவ்வளவு தொகை செலவிட வேண்டும்? வைகை ஆற்றை சேவை மனப்பான்மையுடன் சுத்தம் செய்வதாகக் கூறிவிட்டு ஏன் இவ்வளவு தொகையை செலவு செய்ததாகக் கூறுகிறீா்கள்? இச்செலவு தொகை டீசல் கணக்கா, வாடகைக் கணக்கா, எந்த கணக்கு என்பது தெரியவில்லை என்றனா்.

உறுப்பினா் பாக்கியராஜ் பேசுகையில், எனது வாா்டு பகுதியில் உள்ள வைகை ஆற்றை சீரமைக்க வேண்டும் என நகராட்சி அலுவலா்களிடம் கேட்டபோது, அதற்கு எந்த பதிலும் இல்லை. எனது சொந்த செலவில் சீரமைத்துள்ளேன். அந்த தொகையையும் நகராட்சி நிா்வாகம் கொடுக்குமா? என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT