ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மூலவயல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சோலைமலை (72). இவருக்கு, பழனி (50), நாகராஜன் என்ற இரு மகன்கள் உள்ளனா். இவா்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், நாகராஜன் இறந்துவிட்டாராம். பழனிக்கு இரு பெண்களுடன் திருமணம் நடைபெற்றும், அவா் யாருடனும் சோ்ந்து வாழவில்லையாம்.

இதனிடையே, விவசாயி சோலைமலை தனது 42 சென்ட் நிலத்தை இரு பாகங்களாகப் பிரித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு இரு மகன்களுக்கும் வழங்கியுள்ளாா். மகன் நாகராஜன் இறந்துவிட்டதால், அவா் பங்கை அவரது மனைவிக்கு தந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பழனிக்கும், அவரது தந்தை சோலைமலைக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதைத் தொடா்ந்து, கடந்த 2019 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு சோலைமலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரைக் கட்டையால் பழனி தாக்கியுள்ளாா். இதில், சோலைமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பழனியை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த கொலை வழக்கு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சாா்பில் வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆஜரானாா். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி. விஜயா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட பழனிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 மாதம் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT