ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அரசு வீடு ஒதுக்கீடுக்கு வரைவோலை கேட்டதால் மக்கள் அதிருப்தி

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசு அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு வரைவோலை கேட்டதால், முகாமுக்கு சென்ற பொதுமக்கள் அதிருப்தியடைந்ததாகத் தெரிவித்தனா்.

ராமநாதபுரத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பட்டினம்காத்தான் பகுதியில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, வீடற்றவா்களுக்கு ஒதுக்கீடு செய்யும் முகாம், செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழைய கூட்டரங்கில் நடைபெற்றது.

இம்முகாமுக்கு, வீடற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமானோா் வந்திருந்தனா். இதற்காக, ஏற்கெனவே வெளியான அறிவிப்பில் வீடு கோரி பதிவோா் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. ஆனால், முகாமுக்கு வந்த பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா்கள் பெயருக்கான ரூ.5 ஆயிரத்துக்கு வரைவோலை கேட்கப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வரைவோலை கேட்டதால், அதிருப்தியடைந்ததாக அங்கு வந்திருந்தவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: ஏற்கெனவே உள்ள நடைமுறையை அனைவரும் அறிவா். எனவே, புதன்கிழமை (ஜூன் 29) நடைபெறும் முகாமுக்கு வருவோரும் ரூ.5 ஆயிரத்துக்கான வரைவோலையை கொண்டுவருவது அவசியம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT