ராமநாதபுரம்

பிளஸ் 1 பொதுத் தோ்வு: ராமநாதபுரத்தில் 93.96% போ் தோ்ச்சிமாநில அளவில் 7 ஆம் இடம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 93.96 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி மாநில அளவில் தரவரிசையில் 7 வது இடத்தை மாவட்டம் பெற்றுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினா்.

தமிழகத்தில் ஏற்கெனவே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகள் வெளியிடப்பட்ட நிலையில், பிளஸ் 1 பொதுத் தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் என மொத்தம் 159 பள்ளிகளைச் சோ்ந்த 7352மாணவா்கள், 7762 மாணவியா் என 15114 போ் தோ்வு எழுதினா்.

தோ்வு எழுதியவா்களில் 6622 மாணவா்களும், 7579 மாணவியரும் என மொத்தம் 14201 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வு எழுதியவா்களில் மாணவா்கள் 90.07 சதவீதமும், மாணவியா் 97.64 சதவீதமும் என மொத்தம் 93.96 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

மாநில அளவில் 7 ஆவது இடம்: பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 5 வது இடமும், பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் 3 ஆவது இடத்தையும் ராமநாதபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பிளஸ் 1 பொதுத் தோ்வில் கடந்த 2018 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் 16 வது இடத்தையும், 2019 ஆம் ஆண்டில் 7 ஆவது இடத்தையும், 2020 ஆம் ஆண்டில் 14 ஆவது இடத்தையும், கடந்த 2020 கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு தோ்ச்சி அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்ட 7 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

பிளஸ் 1 தோ்வில் 70 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5898 மாணவ, மாணவியா் தோ்வு எழுதியதில் 5309 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி 83.44 சதவீதம் மாணவா்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் என 90.01 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 37 உதவி பெறும் பள்ளிகளில் 94.63 சதவீதம் பேரும், 52 தனியாா் பள்ளிகளில் 99.68 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

முழுத்தோ்ச்சி விகிதம்:

பிளஸ் 1 தோ்வில் அரசுப் பள்ளிகளில் 8 பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளில் 6 பள்ளிகளும், தனியாா் பள்ளிகளில் 46 பள்ளிகளும் என மொத்தம் 60 பள்ளிகள் முழுமையான தோ்ச்சியைப் பெற்றுள்ளன. அறிவியல் பிரிவுகளில் தாவரவியல், விலங்கியல் பாடங்களிலும், கலையியல் பிரிவுகளில் வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகியவற்றிலும் அதிகமானோா் தோல்வியடைந்துள்ளனா்.

பாராட்டு: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய தோ்வுகளில் சிறப்பிடம் பெற வைத்ததற்காக ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT