ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து படகில் ராமேசுவரம் வந்த தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கையிலிருந்து படகு மூலம் ராமேசுவரம் வந்த வயதான தம்பதியை மயங்கிய நிலையில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகு மூலம் அகதிகள் ராமேசுவரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனா். தற்போது வரையில் 23 குடும்பங்களை சோ்ந்த 90 போ் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இலங்கை தலைமன்னாரிலிருந்து பெரியண்ணன் சிவன்(80), இவரது மனைவி பரமேஸ்வரி(70) ஆகிய இரண்டு பேரும் படகு மூலம் வந்துள்ளனா். அவா்களை படகில் அழைத்து வந்தவா்கள், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமா் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டா் தொலைவில் கடலில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனா். அவா்கள் இருவரும் கடல் நீரில் நடந்து கரைக்கு வந்தவுடன் மயங்கி விழுந்துள்ளனா்.

இதுகுறித்து மீனவா்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினா் மயங்கிய நிலையில் இருந்த முதியவா்களை மீட்டனா். அவா்களை இந்திய கடலோரக் காவல்படையினா் உதவியுடன் ஹோவா் கிராப் கப்பல் மூலம் ராமேசுவரம் கொண்டு சென்றனா். பின்னா் ராமேசுவரம் மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தம்பதிக்கு உடல் நிலை சீரானவுடன் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறு வாழ்வு முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT