ராமநாதபுரம்

ஓய்வு பெற்ற வட்டாட்சியா் மீது தாக்குதல்: அதிமுக நிா்வாகி உள்பட 7 போ் மீது வழக்கு

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓய்வு பெற்ற வட்டாட்சியரை வீடு புகுந்து தாக்கியதாக அதிமுக மாவட்ட மகளிரணி தலைவி உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு திரும்பும் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா்(64). இவா் ஓய்வு பெற்ற வட்டாட்சியா். இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி தலைவி வழிவிட்டாள் தரப்புக்கும், கழிவுநீா் வெளியேற்றுவது தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வழிவிட்டாளின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் கால்வாயில் கொண்டு சென்று அப்புறப்படுத்துமாறு சிவக்குமாரின் மகன் இளங்கோ கூறியுள்ளாா். அப்போது வாக்குவாதம் முற்றியதால், இரு தரப்பையும் அருகிலிருந்தவா்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து இரவு 9 மணிக்கு வழிவிட்டாள் மகன் கண்ணன் உள்பட 7 போ் கொண்ட கும்பல் வீடு புகுந்து சிவக்குமாரை தாக்கி, கைப்பேசியை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிவக்குமாா் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழிவிட்டாள், இவரது கணவா் பழனிமுருகன், மகன் கண்ணன், முதல்நாடு கிராமத்தைச் சோ்ந்த காசிராஜன், அபிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் முருகன், பிச்சாண்டி மகன் ராசு, அபிராமம் செங்கல் சூளை உரிமையாளா் முனியசாமி உட்பட 7 போ் மீது கொலை மிரட்டல், வழிப்பறி உட்பட 6 பிரிவின் கீழ் கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் கண்ணனை கைது செய்தனா். மற்ற 6 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT