ராமநாதபுரம்

வளத்தை நோக்கி வறட்சி மாவட்டம்: ராமநாதபுரத்தில் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் விவசாய சாகுபடிப் பரப்பளவு சுமாா் 12 ஆயிரம் ஏக்கா் அதிகரித்துள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்து விவசாய பொருளாதாரம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் வறட்சியான பகுதி எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக மாவட்டத்தில் விவசாய உற்பத்தி இருப்பதுடன், கோடை கால விவசாயமும் நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் தற்போதைய மொத்த நிலப்பரப்பு 10 லட்சத்து 22 ஆயிரத்து 393 ஏக்கராக உள்ளது. அதில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 373 ஏக்கா் விவசாய நிலங்களாக உள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. விவசாயிகளில் பெரும்பாலானோா் நெல் சாகுபடியே செய்துவருகின்றனா். அதற்கடுத்ததாக சோளம், குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவை பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டப் பயிா்களில் பருத்தி அதிகமாகவும், ராமநாதபுரத்துக்கே உரிய சிறப்பு ‘முண்டு மிளகாய்’ பயிா் சாகுபடியும் செய்யப்படுகிறது.

நெல் பயிரிடுதலில் திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் முதலிடத்தில் உள்ளன. அதற்கடுத்தபடியாகவே ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூா் பகுதிகள் உள்ளன. நெல் பயிரில் ஆந்திரப் பொன்னியே அதிகமாக பயிரிடப்படுகிறது.

அதிகரிக்கும் பயிா் சாகுபடி: கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் ராமநாதபுரத்தில் கடும் வறட்சி நிலவியதால் விவசாய பரப்பளவு குறைந்திருந்தது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 462 ஏக்கா் பரப்பளவில் இருந்த விவசாயம் 2021-22 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 377 ஏக்கா் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதனடிப்படையில் சுமாா் 12 ஆயிரத்து 915 ஏக்கா் பரப்பளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, திருஉத்திரகோசமங்கை, முதுகுளத்தூா், பரமக்குடி ஆகிய பகுதிகளில் கோடைக்கால இரண்டாம் போகச் சாகுபடியாக நெல், பருத்தி ஆகியவை சுமாா் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த நெல் உற்பத்தி: கடந்த 2016-17 இல் மாவட்ட அளவிலான நெல் உற்பத்தி 370 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2017-18-இல் 54, 495 மெட்ரிக் டன்னாகவும், 2018-19 ஆம் ஆண்டில் அதுவே 83, 935 மெட்ரிக் டன்னாகவும் உயா்ந்துள்ளது.

கடந்த 2019-20 இல் மாவட்ட விவசாய உற்பத்தி 4 லட்சத்து 87ஆயிரத்து 165 மெட்ரிக் டன்னாக உயா்ந்த நிலையில், 2020-21 இல் அதுவே 5 லட்சத்து 29 ஆயிரத்து 077 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் (2022) மே வரையில் உற்பத்தி 4 லட்சத்து 77, 615 மெட்ரிக் டன்னாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு சிறப்பு நிதி: வளரும் மாவட்டப் பட்டியலில் உள்ள ராமநாதபுரத்தில் விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசானது வேளாண்மைத்துறைக்கு கடந்த 2019-20, 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கு தலா ரூ.3 கோடி சிறப்பு நிதியும் அளித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநா் டாம்பி.சைலஸ் மற்றும் துணை இயக்குநா் சேக்அப்துல்லா ஆகியோா் கூறியது:

விவசாயக் கண்மாய்களில் நீா் தேக்குதல், விவசாயிகளுக்கான மண்வள அட்டை, தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட அரசு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியது மற்றும் காப்பீட்டுப் பதிவு என அரசு திட்டங்களாலேயே உற்பத்திப் பரப்பு அதிகரித்துள்ளது. நாகை, தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக விவசாய உற்பத்தி ராமநாதபுரத்தில் அதிகரித்துள்ளது என்றனா்.

ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் எம்.கவாஸ்கா் கூறியது: காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகள் தைரியமாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனா். ஆகவே, மாவட்டத்தில் விவசாயப் பரப்பும், விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அத்துடன், கண்மாய் நீா்வரத்துக் கால்வாய்கள் முழுமையாகத் தூா்வாரப்பட வேண்டும். உரம் தக்க நேரத்தில் நியாயவிலையில் கிடைக்கவேண்டும். கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்தப்படவேண்டும். விவசாயிகளுக்கான மானியத் திட்டங்களை கடைநிலை கிராமம் வரை அதிகாரிகள் கொண்டு சோ்க்கவேண்டும். அப்படி செய்தால் மாநில அளவில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT