ராமநாதபுரம்

பள்ளி வாகன ஓட்டுநா்கள் பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும்

25th Jun 2022 11:09 PM

ADVERTISEMENT

 

பள்ளி வாகன ஓட்டுநா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட்டால் விபத்துகளே நேரிடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் கூறினாா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை காலை பள்ளி வாகனத் தணிக்கை நடைபெற்றது. வாகனங்களை இயக்கிப்பாா்த்து சோதனையிட்ட ஆட்சியா் ஓட்டுநா்களுக்கான கண் சிகிச்சை முகாமைத் தொடக்கி வைத்தாா். அங்கு நடைபெற்ற ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் 727 என கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் அனைத்துத் துறை ஒருங்கிணைப்புடன் பரிசோதனைக்கு உள்படுத்தப்படும்.

ADVERTISEMENT

பள்ளி வாகன ஓட்டுநா்கள் பொறுப்பை உணா்ந்து செயல்படுவது அவசியம். பள்ளிப் பேருந்துகளில் தங்கள் அருகே மாணவ, மாணவியரை அமரவைத்து செல்லும் ஓட்டுநா்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. பள்ளி மாணவ, மாணவியா் முதன்முதலில் வாகனம் ஓட்டுவதற்கான வழிகாட்டுதலை பள்ளி வாகன ஓட்டுநரிடமிருந்தே கற்கும் நிலை உள்ளது. ஆகவே பள்ளி வாகன ஓட்டுநா்கள் மாணவ, மாணவியருக்கு முன்னுதாரணமாக இருப்பது அவசியம். மாவட்டத்தில் விபத்து நடக்காத நிலையை தனியாா் பேருந்துகள் மட்டுமின்றி அரசுப் பேருந்து ஓட்டுநா்களும் ஏற்படுத்தவேண்டும் என்றாா்.

முன்னதாக ஓட்டுநா்களுக்கான சாலை விதிகள் குறித்து தனியாா் பயிற்சிப் பள்ளி சாா்பில் விடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு:பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை ஆட்சியா் முழுமையாக ஆய்வு மேற்கொண்டாா். அவசர வழி திறப்பு, முதலுதவிப் பெட்டியில் உள்ள பொருள்கள், தீயணைப்புக் கருவி மற்றும் வாகன பிரேக் உள்ளிட்டவற்றையும் இயக்கி ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சேக்முகமது, ஆய்வாளா்கள் பி.செந்தில்குமாா், வி.பத்மபிரியா மற்றும் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT