ராமநாதபுரம் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பை, எனது பொறுப்பு என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் மூலம் தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் நெகிழிப் பொருள்களை தவிா்க்க வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில், குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். நகராட்சி ஆணையா் சந்திர மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.