ராமநாதபுரம், ஜூன் 20:ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்துக்கு தேவிபட்டினம் பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து குடிநீா் கேட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிய ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமையில் திங்கள்கிழமை குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தேவிபட்டினம் ஊராட்சியில் உள்ள காந்தி நகரில் இருந்து பெண்கள், ஆண்கள் ஏராளமாக வந்தனா். அவா்களில் பெண்கள் பலா் தலையில் காலிக்குடங்களை வைத்திருந்தனா்.
அவா்கள் கூறியதாவது: தேவிபட்டினம் காந்தி நகரில் 500 குடும்பங்கள் வசித்துவருகிறோம். வாரத்தில் குறிப்பிட்ட சில நாள்களே காவிரிக் கூட்டுக்குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. சில மணி நேரங்கள் மட்டுமே குடிநீா் விநியோகிப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆகவே போதிய அளவு குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். காந்திநகரைச் சோ்ந்த மகேஸ்வரன் என்பவரது தலைமையில் வந்த அவா்கள் ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸையும் சந்தித்து மனு அளித்தனா்.
ஆட்சியா் நலத்திட்ட உதவிகள்:குறைதீா்க்கும் கூட்டத்தின் போது மழை பெய்த நிலையிலும் ஏராளமானோா் ஆட்சியரிடம் நேரில் வந்து மனுக்களை அளித்தனா். நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.காமாட்சி கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.