ராமநாதபுரம்: தொண்டி அருகே வாகனத்தில் கடத்தி வந்த 945 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு சாா்பு- ஆய்வாளா் அசோக், தலைமைக் காவலா்கள் குமாரசாமி, முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் தொண்டி அருகே நம்புதாளைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், தலா 35 கிலோ எடையில் 27 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பள்ளத்தூா் பகுதியைச் சோ்ந்த பழனிவேல் (30) என்பவரைக் கைது செய்தனா்.