மீன்பிடித் தடைக்காலம் முடிவடையும் முன்பாகவே ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை கடலுக்குச் சென்றனா்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (61 நாள்கள்) விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வடி, தொண்டி, சோழியகுடி ஆகிய துறைமுகங்களில் 1,750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்தத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
தடைக்காலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில், புதன்கிழமை காலை மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீனவ சங்கத்தினரிடம் அறிவுறுத்தியிருந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள், 1,300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வளத்துறையினரிடம் அனுமதி டோக்கன் பெறாமல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:
கடல் தொழிலாளா்கள் சங்க (சிஐடியு) மாவட்டத் தலைவா் கே.கணேசன், செயலா் எம்.கருணாமூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீன்பிடி தடைக்காலத்தில்தான் மீன் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்பதால் மீன்பிடிப்பதை தவிா்ப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் தடைக்காலம் முடியும் நிலையில், முன்னதாகவே, கடலுக்கு விசைப்படகு மீனவா்கள் செல்வது சரியல்ல. அவா்களுக்கு புதன்கிழமைக்கான (ஜூன் 15 ஆம் தேதி) மீன்பிடி அனுமதி வில்லைகளை மீன்வளா்ச்சித்துறை முன்னதாகவே வழங்குவதும் விதிமீறலை ஊக்குவிப்பதாகவே உள்ளது.
விதி மீறி கடலுக்குச் சென்ற மீனவா்கள் மீது மீன்வளத்துறையினா் சட்டரீதியான நடவடிக்கையை எடுப்பது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.