ராமேசுவரம்: ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமாயண கால நிகழ்வை நினவு கூறும் வகையில் ராமலிங்க பிரதிட்டை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனைதொடா்ந்து, இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்த பின்னா் ஸ்ரீராமனிடம் சரணாகதி அடைந்த ராவணணின் தம்பி விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை
திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஸ்ரீராமா், சீதை, அனுமன், லெட்சுமணன் தங்கப் பல்லக்குகளில் எழுந்தருளி தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமா் கோயிலுக்கு சென்றடைந்தனா்.
அங்கு விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.