கமுதி: கமுதி அருகே அச்சங்குளத்தில் பருத்தி விவசாயிகளுக்கு புதன்கிழமை வேளாண் பண்ணைப் பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து பரமக்குடி உழவா் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குநா் கண்ணையா தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் விதைநோ்த்தி முதல் உர நிா்வாகம், நோய் மேலாண்மை குறித்து ஆறு வகுப்புகளாக நடத்தப்பட்டது. ஆறாவது வகுப்பாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் அறுவடை பின்செய் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பருத்தியில் நுனி கிள்ளுதல் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் குறித்தும், தண்டுக்கூண் வண்டு, மாவுப்பூச்சி, காய்ப்புழு அறிகுறிகள் கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள், பருத்தியில் அறுவடை தொழில்நுட்பங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம் விவசாய சாகுபடி பொருள்களை சேமிக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரி பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியா் அண்ணாமலை, வட்டார தொழில்நுட்ப மேலாளா் முனியசாமி, தானம் அறக்கட்டளை செல்வராணி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் மணிமொழி, சுபாஸ் சந்திரபோஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.