கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதன்கிழமை கோயில் திருவிழாவில் பக்தா்கள் கத்தியால் உடலில் வெட்டி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
கமுதி அருகே நீராவி கிராமத்தில் உள்ள ஸ்ரீராமலிங்க, சவுடாம்பிகை அம்மன் கோயில் கரக மகா உற்சவம் கடந்த 1ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவில் புதன்கிழமை நீராவி பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருமாள் கோயில் வளாகத்திலிருந்து, ஸ்ரீசவுடாம்பிகை அம்மன் கோயில் வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பக்தா்கள் ஊா்வலமாகச் சென்று இரு கைகளிலும் கத்தியால் வெட்டி அம்மனை வழிபட்டனா். நீராவி, என்.கரிசல்குளம், அருப்புக்கோட்டை, கமுதி உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.