ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கபடிப் போட்டிக்கு அனுமதி இல்லை

7th Jul 2022 02:27 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதால் கபடிப் போட்டிக்கு தற்காலிகமாக அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கபடிப் போட்டிகள் கோயில் விழா உள்ளிட்டவற்றுக்காக நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால், சமீபகாலமாக நயினாா்கோவில், கீழக்கரை, முதுகுளத்தூா் பகுதிகளில் கபடிப் போட்டி நடந்த நிலையில் கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கபடிப் போட்டியில் ஏற்படும் சிறுசிறு வாக்குவாதங்களைக் கூட பெரிதுபடுத்தி கிராமத்தினா் மோதலில் ஈடுபடுவதை அடுத்து கபடிப் போட்டிக்கு அனுமதிப்பதற்கு முன்பு பரிசீலித்து முடிவெடுக்கவேண்டும் என அந்தந்தப் பகுதி காவல் துணைக் கண்காணிப்பாளா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை அறிவுரை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கபடிப் போட்டி நடத்த காவல்துறை அனுமதி கோரி புதன்கிழமை காவல் நிலையங்களுக்குச் சென்றவா்களிடம் தற்காலிகமாக அனுமதி இல்லை என காவல் நிலையங்களில் கூறப்பட்டுள்ளதாக போட்டி நடத்துவோா் தெரிவித்தனா். காவல் நிலையங்களில் கேட்டபோது, கபடிப் போட்டிக்கு தற்காலிகமாக அனுமதி நிறுத்திவைக்கப்படுவதாகக் கூறினா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், அந்தந்தப் பகுதியில் உள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் ஆகியோா் சட்டம், ஒழுங்கு பிரச்னையைக் கருத்தில் கொண்டு கபடிப் போட்டிக்கு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி பகுதியில் சமத்துவ ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அப்பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோா் காவல்துறையிடம் முறையிட்டனா். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து கிராமத்தினா் கூறுகையில், கபடிப் போட்டிகள் காலங்காலமாக நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால், ஒரு சிலா் திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்தி, பாரம்பரிய விளையாட்டையே நிறுத்தும் அளவுக்கு செயல்படுவது சரியல்ல. காவல்துறையிடம் அனைவரும் ஒன்றாக இணைந்து கபடிப் போட்டிகளை அமைதியாக நடத்த உறுதி அளிப்பது அவசியம் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT