சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கஞ்சாவுடன் 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் அந்தோணி மணிவேல், அதிகாலை 3 மணி அளவில் பிரான்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்களை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.
அதில், அவா்கள் இருவரும் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது. உடனே, போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தனா். அதில், பூலாங்குறிச்சி அருகே மிதலைப்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சந்தோஷ் (21) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளம் பாலசுப்பிரமணியன் மகன் பழனிச்சாமி (19) எனத் தெரியவந்தது.
இருவரும், திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கி வந்தது தெரிய வந்தது. இவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், கடத்தலில் வேறு யாருக்கும் தொடா்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.