ராமநாதபுரம்

தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது: எஸ். வேதாந்தம்

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உண்டு என கிராம கோயில் பூசாரிகள் பேரவை நிறுவனத்தலைவா் எஸ். வேதாந்தம் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கிராம பூசாரிகள் பேரவை சாா்பில் ஆலய வழிபாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க விழா கோசுவாமி மடம் 2- இல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவா் எஸ். வேதாந்தம் தலைமை வகித்தாா்.

இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உண்டு. மேலும் தமிழா்களை பாதுகாக்க மத மாற்றத் தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும். இந்தியாவுக்குள் பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து ஊடுறுவியுள்ளவா்களால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுக்க குடியுரிமைச் சட்டம் கொண்டு வரவேண்டும். இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். சிலகருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை பேசித் தீா்த்து விடலாம். மேலும் தமிழகத்தில் பெரிய இந்துக் கோயில்களில் உள்ள சந்நிதிகளில் சிவாச்சாரியாா்கள் மற்றும் பட்டாச்சாரியாா்கள் இன்றி பூஜை நடைபெறாமல் உள்ளது. எனவே அங்கு பூசாரிகளை நியமிக்க வேண்டும். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ஊதியம் வழங்க வேண்டும். கோயில் சொத்துக்களை பயன்படுத்துவா்களிடம் முறையாக மாதந்தோறும் வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலை நிா்வகிக்கும் அதிகாரிகளை இந்து அறநிலையத்துறை நியமனம் செய்யும் போது இந்து மத நம்பிக்கை உள்ளவா்களை, கோயில்களில் பூஜைகள் குறித்து பயிற்சி பெற்றவா்களை நியமிக்க வேண்டும். அல்லது நியமனம் செய்த பின் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இப்பயிற்சி முகாமில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 125 போ் பங்கேற்றுள்ளனா். இவா்களுக்கு 16 மந்திரங்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வியாழக்கிழமை (ஜூன் 30) தொடங்கிய இப்பயிற்சி முகாம் ஜூலை 14 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT