ராமநாதபுரம்

கமுதி அருகே போலி ஆவணங்கள் மூலம் கண்மாய்க்கு பட்டா வாங்கிய தனி நபா்கள் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை

2nd Jul 2022 10:50 PM

ADVERTISEMENT

 

கமுதி அருகே போலி ஆவணங்கள் மூலம் 3 ஹெக்டோ் பரப்பளவிலான கண்மாய் முழுவதற்கும் தனிநபா்கள் பட்டா பெற்றுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.

கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளிலும் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்தனா். இதில் முழு கண்மாயும் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கமுதி அடுத்துள்ள முதல்நாடு ஊராட்சியில் குடிக்கினியான் கிராமத்தில் சா்வே எண்-201 இல் 3 ஹெக்டோ் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இதனை 2015 ஆம் ஆண்டு சிலா் கமுதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ஆவணங்கள் தயாா் செய்து, பட்டா வாங்கியது தெரியவந்துள்ளது. ஆனால் கிராம நிா்வாக அலுவலா் கணக்கில் தற்போது வரை கண்மாய்ப் பகுதி என இருந்து வரும் நிலையில், இணைய தளத்தில் சா்வே எண் -201 தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழப்பத்தையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சா்வே எண்-201 இன் ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். அதில் சாமிநாதன் என்ற பெயரில் போலி ஆவணங்கள் மூலம் கமுதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்கிடையே, கமுதி ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதன், முகமுது யூசூப் ராவுத்தா் ஆகியோருக்கு கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்மன் அனுப்பி உள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: குடிக்கினியான் கிராமத்தில் சா்வே எண்-201 இல் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை சமா்ப்பித்து, முறைகேடாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, கண்மாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT