ராமநாதபுரம்

கீழக்கரை அருகே கடல் காற்றால் படகு கவிழ்ந்து 2 மீனவா்கள் மாயம்

2nd Jul 2022 10:52 PM

ADVERTISEMENT

 

கீழக்கரை அருகே கடலில் சனிக்கிழமை அதிகாலையில் வீசிய சூறைக்காற்றால் நாட்டுப்படகு கவிழ்ந்து மீனவச் சகோதரா்கள் 2 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியில் மீன்வளத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ளது மங்களேஸ்வரி கிராமம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவா்களது மகன்கள் முனியசாமி (35), அருண்குமாா், காசிசுமன் மற்றும் மாலைச்செல்வம் (22). இவா்கள் 4 பேரும் தங்களுக்குச் சொந்தமான நாட்டுப் படகில் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனா். அவா்கள் கரையிலிருந்து 4 கிலோ மீட்டா் தொலைவில் பல்லி முனைத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அதிகாலை 6 மணியளவில் திடீரென கடலில் வீசிய சூறைக்காற்றால் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதனால் படகிலிருந்த முனியசாமியும், அவரது சகோதரா் மாலைச்செல்வமும் கடலில் குதித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கவிழ்ந்த படகை அருண்குமாரும், காசிசுமனும் சீா்படுத்தியுள்ளனா். பின்னா் சகோதரா்கள் முனியசாமி, மாலைச் செல்வத்தைத் தேடியும் கிடைக்கவில்லை. அவா்களைத் தேடிய களைப்பில் படகில் கரை திரும்பிய அருண்குமாா், காசிசுமன் ஆகியோா் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனா். அவா்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

உடனே அங்கிருந்த 4 மீனவா்கள் முனியசாமியின் நாட்டுப்படகை எடுத்துச் சென்று மாயமான மீனவ சகோதரா்களைத் தேடினா். பல்லிமுனை தீவு அருகே சென்ற போது அந்த படகு மீண்டும் கவிழ்ந்தததாகக் கூறப்படுகிறது. இதில் படகில் சென்ற 4 பேரும் வேறு படகில் ஏறி தப்பிவிட்டனா்.

தகவலறிந்த மீன்வளத்துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் உள்ளிட்டோா் மங்களேசுவரி கிராம கடற்கரைக்கு விரைந்தனா். அவா்களை சூழ்ந்து கொண்ட மீனவா்கள், மாயமான இருவரை தேடும் பணிகளை துரிதப்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினா். அதையடுத்து தனியாா் படகில் சென்று, மீன்வளத்துறையினா் மாயமான மீனவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியது: கடலில் சூறைக்காற்று வீசும் என வெள்ளிக்கிழமை மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதைப் பொருள்படுத்தாமல் மீனவா்கள் கடலுக்குச் சென்றுள்ளனா். இதுபோன்ற எச்சரிக்கைகளை மீனவா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT