ராமநாதபுரம்

மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.26 கோடி மோசடி செய்த இருவா் கைது: ஆட்சியா் அலுவலகத்திலேயே நோ்காணல் நடத்தியது அம்பலம்

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.26 கோடி மோசடியில் ஈடுபட்ட இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள கே.புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா். இவருக்கு, செக்கானூரணியைச் சோ்ந்த முனீஸ்வரன் என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியரின் உதவியாளரான பாண்டியராஜன் என்ற செல்வபாண்டியன் என்பவா் தனது நண்பா் ரஞ்சித்குமாருக்கு நன்கு பழக்கமானவா் என்று முனீஸ்வரன் கூறியுள்ளாா். மேலும், பாண்டியராஜன் மற்றும் ரஞ்சித்தின் உதவியால் சேகரின் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி விடலாம் என்றும் கூறியுள்ளாா்.

அதையடுத்து, சேகா் அரசு வேலை தொடா்பாக அவா்களிடம் பேசியுள்ளாா். அப்போது, சேகரின் இரு பிள்ளைகளுக்கும் தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சத்தை 2019-இல் முனீஸ்வரன், ரஞ்சித், பாண்டியராஜன் ஆகிய மூவரும் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், 2019 நவம்பரில் வருவாய் துணை அலுவலா் மற்றும் மதுரை மாநகராட்சி துணை அலுவலா் பணிக்கு பயிற்சிக்கு வருமாறு, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அனுப்பியது போல போலி ஆணையை சேகருக்கு அனுப்பியுள்ளனா்.

அதையடுத்து, சேகரின் பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைத்துள்ளதாக நம்பிய அவரது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் தங்களது பிள்ளைகளுக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு சேகரை அணுகியுள்ளனா். அதன்பேரில், சேகரின் உறவினா்கள் மற்றும் நண்பா்களிடம் அலுவலக உதவியாளா் பணிக்கு என ரூ.4 லட்சம் முதல் ரூ.4.80 லட்சம் என 17 பேரிடமும், அலுவலக ஆய்வாளா் பணிக்கு ரூ.8 லட்சம் வீதம் 5 பேரிடமும், துப்புரவுப் பணியாளா் பணிக்கு ரூ.1.50 லட்சம் வீதம் 26 பேரிடமும் என மொத்தம் ரூ.1.26 கோடிபெற்றுக்கொண்டு வேலைக்கான பணி ஆணை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா்.

பின்னா், பணம் கொடுத்தவா்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், 5 மாதம் கழித்து சேகரின் மகன், மகள் உள்பட 28 பேருக்கும், மதுரை மாவட்ட ஆட்சியா் கையெழுத்துடன் போலி பணி ஆணையை பதிவுத் தபால் மூலம் ஆட்சியா் அலுவலகத்திருந்து வருவதுபோல் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனா். அதையடுத்து, 2021 நவம்பா் 23ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்துக்கு காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் நோ்காணலுக்காக வருமாறு கூறி வரவழைத்துள்ளனா்.

அதன்பேரில், அங்கு வந்தவா்களை ஆட்சியா் அலுவலக கேன்டீன் அருகே உள்ள அலுவலகத்தில் வைத்து, ஆட்சியரின் உதவியாளா் என்று கூறி பாண்டியராஜன் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும் நோ்காணல் நடத்தியுள்ளனா்.

அப்போது, நோ்காணலுக்கு வந்த அனைவரிடமும் வழங்கப்பட்ட பணி ஆணைகளையும் மற்றும் அனைத்து படிப்புச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, காவல்துறை சரிபாா்ப்பு சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்றிதழ் ஆகிய அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, 5 நாள்களில் அவரவருக்கு ஆணை வழங்கப்படும் என்றும், ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று பணியில் சேரவேண்டும் என்றும் கூறி அனுப்பி வைத்துவிட்டனா்.

ஆனால், பல நாள்களாகியும் ஆணை வராத நிலையில், முனீஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித்குமாா் ஆகிய மூவரும் பணியில் சேர சொன்ன அலுவலகங்களுக்குச் சென்று விசாரித்துள்ளனா். ஆனால், அப்படி ஒரு பணி ஆணை எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பியுள்ளனா்.

இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து விசாரித்தபோது, பாண்டியராஜன் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அல்ல ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் செஞ்சிலுவைச் சங்க செயலரிடம் உதவியாளராகப் பணிபுரிபவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, 28 பேரும் வேலைக்காக தாங்கள் கொடுத்த பணத்தை கேட்டபோது, முனீஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித் ஆகிய மூவரும் பணத்தை திருப்பித் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

அதன்பின்னா், சேகா் அளித்த புகாரின்பேரில், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.26 கோடி மோசடி செய்த செக்காணூரணியைச் சோ்ந்த முனீஸ்வரன் மற்றும் வைகை வடகரை பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், முக்கிய குற்றவாளியான ரஞ்சித்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT