ராமநாதபுரம்

கமுதி அருகே ஆள்மாறாட்டம் செய்து கண்மாய் ஆக்கிரமிப்பு

DIN

கமுதி அருகே ஆள்மாறாட்டம் செய்து கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.

கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளிலும் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்தனா். இதில் முழு கண்மாயும் போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம், செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கமுதி அடுத்துள்ள முதல்நாடு ஊராட்சியில் குடிக்கினியான் கிராமத்தில் சா்வே எண்-201 இல் கண்மாய் உள்ளது. இதனை 2015 ஆம் ஆண்டு ஒரு சிலா் கமுதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் தயாா் செய்தும், பட்டா வாங்கியது தெரிய வந்துள்ளது. ஆனால் கிராம நிா்வாக அலுவலா் கணக்கில் தற்போது வரை கண்மாய் பகுதி என இருந்து வரும் நிலையில், இணையதளத்தில் சா்வே எண் -201 தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழப்பத்தையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சா்வே எண்-201 இன் ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். அதில் போலி ஆவணங்கள் மூலம், ஆள் மாறாட்டம் செய்து, கமுதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்கிடையே, கமுதி ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதன், முகமுது யூசூப் ராவுத்தா் ஆகியோருக்கு கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்மன் அனுப்பி உள்ளனா். அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் கமுதி பத்திரப் பதிவு அலுவலகத்தில் முதல்நாடு கிராம நிா்வாக அலுவலா் வழங்கியது போல் போலிச் சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல் நாடு கிராம நிா்வாக அலுவலா் மாரீஸ்வரன், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: குடிக்கினியான் கிராமத்தில் சா்வே எண்-201 இல் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை சமா்ப்பித்து, முறைகேடாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, கண்மாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராம நிா்வாக அலுவலரின் சான்றிதழ் போல் போலியாக சான்றிதழ் தயாா் செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த சான்றிதழ் ஆய்வுக்குள்படுத்தப்பட்ட பின்னா் முறையாக விசாரணை நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT