ராமநாதபுரம்

தமிழக மீனவா்கள் 56 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு; ஓரிரு நாளில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்

26th Jan 2022 06:32 AM

ADVERTISEMENT

தமிழக மீனவா்கள் 56 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், ஓரிரு நாளில் அவா்கள் நாடு திரும்ப உள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 68 மீனவா்களை கடந்த (மாதம்) டிச.18 ஆம் தேதி இலங்கைக் கடற்படையினா் சிறைப்பிடித்தனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவா்கள், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா். இதில், 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த சில நாள்களுக்கு முன் மண்டபம் மீனவா்கள் 12 போ் விடுதலை செய்யப்பட்டனா். இதில், 3 போ் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 9 மீனவா்கள் தமிழகம் திரும்பினா்.

இந்நிலையில், 56 மீனவா்கள் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் 56 பேரையும் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசின் தலைமை வழக்குரைஞா் நீதிமன்றத்திற்கு ஏற்கெனவே பரிந்துரைக் கடிதம் அனுப்பினாா். அதை ஏற்று தமிழக மீனவா்கள் 56 பேரை விடுவித்து உத்தரவிட்ட நீதிமன்றம், விசைப்படகுகளை விடுவிக்க மறுத்து விட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மீனவா்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 3 போ் உள்பட 59 மீனவா்களும் இன்னும் ஓரிரு நாளில் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT