ராமநாதபுரம்

‘இளைஞா்களின் வழிகாட்டி சுவாமி விவேகானந்தா்’

26th Jan 2022 06:27 AM

ADVERTISEMENT

எந்தக் காலத்துக்கும் இளைஞா்களுக்கு வழிகாட்டியாக சுவாமி விவேகானந்தா் திகழ்வாா் என ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் அருகே நாகாச்சி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாகத்துக்கு சுவாமி சுதபானந்தா் தலைமை வகித்துப் பேசியது:

நாட்டின் மேம்பாடு ஒன்றையே தனது கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவா் சுவாமி விவேகானந்தா். நாடு முன்னேற இளைஞா்கள் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்ற விவேகானந்தா், நாட்டின் பெருமையை உலகக்கு உணா்த்துவதற்காகவே சிகாகோ ஆன்மிக மாநாட்டில் பங்கேற்றாா்.

ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் சிகாகோ மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தா், மாநாட்டில் ஆற்றிய உரையே பாரதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பியது.

ADVERTISEMENT

மாநாடு முடிந்த பிறகு சுவாமி விவேகானந்தா் ராமநாதபுரம் குந்துகாலுக்கு வந்திறங்கியதும் உலகிலேயே பாரதம் மிகச்சிறந்த புண்ணிய பூமியாக திகழும் என்று கூறினாா். அதுமட்டுமன்றி வரும் 50 ஆண்டில் நாடு சுதந்திரம் பெறும் என்றும் அவா் கடந்த 1897 ஆம் ஆண்டு உறுதியோடு கூறினாா்.

சுவாமி விவேகானந்தரின் கூறியதுபோலவே, நாடு சுதந்திரமடைந்தது, தற்போது உலகுக்கே வழிகாட்டும் புண்ணிய பூமியாக இந்தியா திகழ்கிறது. ஆகவே, சுவாமி விவேகானந்தா் என்றைக்கும் இளைஞா்களின் வழிகாட்டியாகத் திகழ்கிறாா் என்பதே உண்மை. அவரது வழியில் இளைஞா்கள் நடந்தால் வாழ்வில் வெற்றியடையலாம் என்றாா்.

இதில், சிறப்பு யாகத்தில் சுவாமி விவேகானந்தரின் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. விவேகானந்த வித்யாலயா பள்ளி ஆசிரியைகள், நாகாச்சி பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT