இலங்கைச் சிறையிலுள்ள மீனவா்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது என திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கடந்த மாதம் மீன்பிடிக்கச் சென்ற போது 10 விசைப்படகுகள் மற்றும் 68 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.மேலும் 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், 12 மீனவா்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனா். 9 மீனவா்கள் நாடு திரும்பிய நிலையில், 3 மீனவா்கள் கரோனா தொற்று காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 13 ஆம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட 56 மீனவா்களுக்கு வரும் 21 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் தமிழக மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சிறையிலுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி முதல் ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது என ராமேசுவரத்தில் நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலை நிறுத்தம் செய்வது குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என மீனவா் சங்கத்தலைவா் சகாயம் தெரிவித்தாா்.