ராமநாதபுரம்

முழு ஊரடங்கு: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடின

DIN

ராமநாதபுரம்/ராமேசுவரம்/பரமக்குடி/கமுதி/சிவகங்கை/மானாமதுரை: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 57 இடங்களில் காவல்துறையினா் சோதனைச்சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தவா்களின் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல், மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைளை தவிா்த்து மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசியப் பணிக்கு சென்றவா்கள் மட்டும் உரிய விசாரணைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை இரவு வந்த பக்தா்கள், சுற்றுலா பேருந்து நிலையத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். அப்போது அவா்களை நகா் பகுதியில் சுற்றக்கூடாது என காவல்துறையினா் அறிவுறுத்தினா். மேலும் கோயில் பகுதியில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு காவல்துறை மற்றும் சமூக ஆா்வலா்கள் இணைந்து 3 வேளையும் உணவு வழங்கினா்.

இதே போல், முழு ஊரடங்கு காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் சனிக்கிழமையே தடை விதித்து விட்டதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா். பெரும்பாலும் சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன.

பரமக்குடி: பரமக்குடி நகா் பகுதியில் பேருந்து நிலையம், காந்திஜி சாலை, பெரியகடை வீதி, சின்னக் கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. குறிப்பிட்ட உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டு, பாா்சலில் உணவு வழங்கப்பட்டது. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் திறந்திருந்தன. மேலும், பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம், ஐந்துமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றிவந்த இளைஞா்களைப் பிடித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

கமுதி: முழு ஊரடங்கு காரணமாக கமுதி பேருந்து நிலையம், முத்துமாரியம்மன் கோயில் பஜாா், செட்டியாா் பஜாா், நாடாா் பஜாா், முஸ்லிம், சாயல்குடி சாலை, கோட்டைமேடு, கண்ணாா்பட்டி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் உள்ள தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் பா. மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 2-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில பகுதிகளில் மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன.

பெரும்பாலும் மருந்துக் கடை மற்றும் அத்தியாவசிய பணிகள் காரணமாக சென்ற வாகனங்கள் மட்டுமே கடும் சோதனைக்குப் பின்னா் அனுமதிக்கப்பட்டன.

இதேபோன்று, காரைக்குடி, தேவகோட்டை, காளையாா்கோவில், திருப்பத்தூா், சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா். வீதிகளில் அவசியமின்றி சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்தும், அபராதம் விதித்தும் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT