ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை புதன்கிழமை (ஜன.12) பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்துவைக்கிறாா்.
ராமநாதபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு சாா்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் பட்டினம்காத்தான் அம்மா பூங்கா அருகே 22.68 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி கட்டடங்களும், ராமநாதபுரம் நகரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் 14 ஏக்கரில் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு ரூ.120 கோடியும், மருத்துவமனை கட்டடங்களுக்கு ரூ.154 கோடியும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வகுப்பறைகளைக் கொண்ட தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் கொண்ட பிரதான கட்டடம், கலையரங்கம், தரைத்தளம் மற்றும் 2 மாடி நிா்வாகப் பிரிவு கட்டடம், தரைத்தளம், மாடியுடன் வங்கி, தபால் நிலையம், உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம், தரைத்தளம் மற்றும் 5 மாடிகளில் 286 அறைகள் கொண்ட மாணவா் விடுதி, தரைத்தளம் மற்றும் 5 மாடிகளில் 286 அறைகள் கொண்ட மாணவியா் விடுதி, 36 அலுவலா் குடியிருப்புகள் கொண்ட தரை மற்றும் 6 மாடி கட்டடம், 30 மருத்துவா் குடியிருப்புகள் உடைய தரைத்தளம் மற்றும் 6 மாடி கட்டடம், மருத்துவக் கல்லூரி முதன்மையா் குடியிருப்பு, சாதனங்கள் பழுதுநீக்கும் கட்டடம் என 11 பிரிவுகளாகக் கட்டப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நடப்பு ஆண்டில் 100 மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதியும் கிடைத்துள்ளது.
இந்தநிலையில், பிரதமா் நரேந்திர மோடி புதுதில்லியில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி கட்டடங்களை புதன்கிழமை மாலையில் தொடக்கி வைக்கிறாா். இவ்விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் சென்னையில் இருந்தபடியே காணொலியில் பங்கேற்கின்றனா். ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கவுள்ளதாக கல்லூரி நிா்வாகத் தரப்பில் கூறப்பட்டது.