இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 43 பேரின் காவலை ஜனவரி 13 ஆம் தேதி வரை நீட்டித்து ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் இருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரத்தை சோ்ந்த 6 விசைப்படகுகளுடன் 43 மீனவா்களையும், மண்டபத்தை சோ்ந்த 2 விசைப்படகுகளுடன் 12 மீனவா்களையும் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதில் ராமேசுவரம் மீனவா்கள் 43 பேரை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்திலும், மண்டபம் மீனவா்கள் 12 பேரை மன்னாா் நீதிமன்றத்திலும் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 43 பேரையும் ஊா்க்காவல் துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். அவா்களின் நீதிமன்ற காவலை ஜனவரி 13 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து அவா்கள்
மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 55 பேரையும் விடுவிக்க உறவினா்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அவா்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.