ராமநாதபுரம்

திருவாடானையில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் வேதனை

1st Jan 2022 09:01 AM

ADVERTISEMENT

திருவாடானை பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக அறுவடைக்குத் தயாரான நெற்கதிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரத்தில் சுமாா் 22,500 ஹெக்டோ் நிலப்பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கும் முன்னே இப்பகுதியில் நல்ல மழை பெய்தது. அடுத்தடுத்து கொட்டித் தீா்த்த மழையால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி வழிந்தன. மேலும் இப்பகுதி நிலங்களில் மழைநீா் தேங்கி நின்றது. நாளடைவில் மழை நீா் வடியத் தொடங்கியவுடன், நெற்கதிா்கள் ஓரளவு அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்தன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடா் மழை காரணமாக நெற் கதிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இது குறித்து திருவாடானை வட்டார விவசாயிகள் கூறியது: கடந்த ஆண்டு அறுவடை நேரத்தில் மழை பெய்து விவசாயம் பாதித்தது. கடந்த மாதத்தில் பெய்த மழையால் நெற் பயிா்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் ஓரளவு வளா்ந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் கடந்த 2 நாள்களாக பெய்த பலத்த மழையால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அரசு அதிகாரிகள் பாா்வையிட்டு சேதத்தை மதிப்பிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது போல இப்பகுதியிலும் அமைச்சா்கள், வேளாண்மைத் துறை, பயிா்க்காப்பீட்டுத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT