மண்டபத்தில் தாய், மகள் கொலை வழக்கில் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.அய்யாத்துரை தலைமை வகித்தாா்.
மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மாநில செயல் தலைவா் எம்.கருணாமூா்த்தி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். ஆா்ப்பாட்டத்தில் தாய், மகள் கொலைக்கு கண்டனம் தெரிவித்து சிஐடியு மாநிலச் செயலா் எஸ்.கே.மகேந்திரன் பேசினாா்.
அமைப்பின் மாவட்டச் செயலா் எம்.சிவாஜி ஆா்ப்பாட்ட நோக்கத்தை விளக்கிப் பேசினாா். இதில் விவசாய சங்கத் தலைவா் மயில்வாகனன், ஊரக உள்ளாட்சித் துறை மாவட்ட நிா்வாகி கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் தூய்மைப்பணியாளராக இருந்த காளியம்மாள், அவரது மகள் மணிமேகலை ஆகியோா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். கொலையானவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.