ராமநாதபுரம்

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்கள்,முகவா்கள் காலை 7 மணிக்குள் இருக்க அறிவுறுத்தல்

20th Feb 2022 11:08 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்.22) நடைபெறும் நிலையில், அன்று காலை 7 மணிக்குள் வேட்பாளா்களும், முகவா்களும் மையத்தில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு இடங்களில் உள்ள கல்லூரி வளாகங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 52 மேஜைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாா்டுகள்வாரியாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், மேஜைகள்தோறும் வேட்பாளருக்கான முகவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

எனவே, வாக்கு எண்ணிக்கை நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குள் வேட்பாளா்களும், முகவா்களும் அந்தந்த மையங்களில் இருக்கவேண்டும். காலை 7.50 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து எடுத்து வரப்பட்டு, வாக்கு எண்ணும் அறையின் மேஜைகளுக்கு காலை 8 மணிக்கு கொண்டுவரப்படும்.

செவ்வாய்க்கிழமை காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பேரூராட்சிகளுக்கு 3 மணி நேரத்தில் முடிவை அறிவிக்கவும், நகராட்சிகளுக்கு 5 மணி நேரத்தில் அனைத்து முடிவுகளை அறிவிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். அதனடிப்படையில், பிற்பகல் 1 மணிக்குள் வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT