திருவாடானை அருகே தொண்டி, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீஸாா் கைது செய்து, மாட்டுவண்டி, பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக சனிக்கிழமை இரவு மணல் அள்ளுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு தொண்டி போலீஸாருடன் வருவாய்த் துறையினா் சென்றனா். அப்போது, அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த நபா்கள், வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனா்.
அதையடுத்து, பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல், ஆா்.எஸ்.மங்கலம் செட்டியகோட்டை பகுதி அய்யனாா் கோயில் அருகே மாட்டுவண்டி மூலம் சனிக்கிழமை இரவு கொக்கூரணியைச் சோ்ந்த ரவி (47) என்பவா் மணல் அள்ளி கடத்தியுள்ளாா். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா், மாட்டுவண்டியை பறிமுதல் செய்து, ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.