ராமநாதபுரம்

ஹைட்ரஜன் சேமிப்புக் கலன் உற்பத்தி ஆராய்ச்சி: காரைக்குடி சிக்ரியுடன் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்

17th Feb 2022 12:09 AM

ADVERTISEMENT

 

காரைக்குடி: ஹைட்ரஜனை சேமித்து வைப்பதற்கான நவீன கலன்களை உற்பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (சிக்ரி) அமெரிக்காவில் உள்ள ஒஹ்மியம் சா்வதேச நிறுவனம் ரூ. 2.50 கோடி நிதி உதவியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து சிக்ரி இயக்குநா் ந. கலைச்செல்வி கூறியது: கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத உலகம் என்ற இலக்கை எட்டுவதற்கு பசுமை ஹைட்ரஜனுக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. சிஎஸ்ஐஆா்-ன் அங்கமான சிக்ரியுடன் ஒஹ்மியம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம், குறைந்த செலவில் பசுமை ஹைட்ரஜனை உறுதி செய்ய உதவும். மேலும் இதன் பல்வேறு வடிவங்கள் உலகின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு இருக்கும் என்றாா்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சியாளா் ஜோனா டேவிட்சன் கூறியது: தற்போது உலகளவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் உற்பத்தி குறைந்து வருகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் எரிபொருள் தேவை அதிகரிக்கும். அதனால் ஹைட்ரஜனை (எரிவாயு) சேமிப்பதற்குரிய கலன்களின் தேவையும் அதிகரிக்கும். அதனால்தான் இதனை சேமிப்பதற்காக புதிய பொருள்களை உருவாக்க சிக்ரி கடந்த பிப். 4 முதல் இந்த ஆராய்ச்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியானது மூன்று ஆண்டுகள் நடைபெறும் என்றாா்.

ADVERTISEMENT

வடிவமைப்பு, உற்பத்தி, பி.எம் எலக்ட்ரோலைசா் பொருத்துதலில் தனித்துவமான அமெரிக்க ஒஹ்மியம் நிறுவனத்தின் பெங்களூரில் உள்ள இந்திய கிளையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சொ. கருப்பையா கூறுகையில், இந்த நிதியுதவி சிக்ரியின் ஆழ்ந்த அனுபவத்தையும், வளங்களையும் அதிகரிக்க உதவும். மேலும் இரண்டு நிறுவனங்களின் தற்போதைய மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் திட்டங்களுக்கு இது பயன்தரும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT