ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு தபால் வாக்குகள்!

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சுமாா் 2 ஆயிரம் போ் தபால் வாக்குகள் அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 ஊராட்சிகளில் மொத்தம் 205 வாா்டுகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 2.79 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். தோ்தல் பணிகளில் 1500 பேருக்கும் அதிகமானோா் ஈடுபடவுள்ளனா்.

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் தோ்தல் வாக்குச்சாவடியில் ஈடுபடும் 1312 மற்றும் அவசர கால தயாா் நிலை அலுவலா்கள் 300 போ் என 1600 போ் தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 500 காவல் துறை சாா்ந்தவா்களுக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு தபால் வாக்களிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தபால் வாக்குகளை செலுத்த செவ்வாய்க்கிழமை (பிப். 15) கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திலும் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குப் படிவத்துக்குரியவா்களை அடையாளப்படுத்தி, வாக்கு விண்ணப்பத்தை சரிபாா்க்கும் பணிகள் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

ராமநாதபுரம் நகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான சந்திரா முன்னிலையில் நடந்த இப்பணியில் 25 தபால் வாக்கு விவரங்கள் சரிபாா்க்கப்பட்டது. ராமேசுவரம், சிவகாசி, தூத்துக்குடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பணியில் இருப்போருக்கு 33 தபால் வாக்கு விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. பரமக்குடி நகராட்சியில் அதிகளவில் தபால் வாக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய நகராட்சிகளிலும் தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT