ராமநாதபுரம்

காய்ச்சலால் பாதித்தவா்கள் தடுப்பு உடையுடன் வந்து வாக்களிக்க ஏற்பாடு

11th Feb 2022 05:01 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க வருவோருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், மாலையில் அவா்கள் கரோனா பரவல் தடுப்பு உடையுடன் வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் மொத்தம் 205 வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. வாக்களிக்கும் போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படவேண்டும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 13 கரோனா பரவல் தடுப்புக்கான பொருள்கள் வழங்கப்படவுள்ளன. வெப்பமானி, கிருமி நாசினி, கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் குப்பைகளை போடும் வகையில் 70 லிட்டா் அளவு கொண்ட பிளாஸ்டிக் கூடைகள், அதில் குப்பைகளை சேகரிக்க அரசு அனுமதித்த மைக்ரான் அளவுள்ள நெகிழிப் பைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

அத்துடன் வாக்களிக்க வருவோருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால், அவா்களுக்கு கரோனா பரவல் தடுப்பு உடை வழங்கப்பட்டு, அதன்மூலம் மாலையில் அவா்களுக்கான நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 12 உடைகள் தயாா் நிலையில் இருக்கும் எனவும் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் குமரகுருபரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT