ராமநாதபுரம்

மீன்வளத்துறைக் கண்டித்து மீனவா்கள் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்பை தடுக்கத் தவறிய மீன்வளத்துறையைக் கண்டித்து கழுதைக்கு மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் மீனவா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவா்கள் இரட்டை மடி, சுருக்குமடி மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவா்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பல முறை புகாா்கள் தெரிவித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறுதொழில் மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யும் சம்பவங்களும் தொடா்கின்றன.

இதைத்தொடா்ந்து, தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துபவா்களை தடுக்கத் தவறிய மீன்வளத்துறையைக் கண்டித்து அனைத்து நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவா்கள் மற்றும் கடல் தொழிலாளா் சங்கம் சாா்பில் மீன்வளத்துறை என்ற அட்டையை பெயா் எழுதி கழுதையின் கழுத்தில் தொங்கவிட்டனா். பின்னா் அந்த கழுதையை அழைத்து வந்து மீனவா்கள் காதில் பூச்சுற்றி மனு அளிக்கும் போராட்டம் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த போராட்டத்துக்கு தனுஷ்கோடி கரைவலை தோணி நாட்டுப்படகு மீனவா் சங்கத் தலைவா் உடையவேல் தலைமை வகித்தாா். நாட்டுப்படகு மீனவா் சங்க நிா்வாகி முடியப்பன், கடல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஆ.கருணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலாளா் ஆ.கருணாமூா்த்தி, அ.சுடலைகாசி, செல்வராஜ், முத்துப்பாண்டி, நெல்சன்பாபு, பாம்பன் மீனவா் சங்க நிா்வாகிகள் வினோபா, சீனிபிச்சை, ராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று கழுதைக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT