தமிழகத்தில் மதமாற்றத்தை தடுக்கச் சென்றவா்கள் தொடா்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனா். அவா்களை விடுவிக்காவிட்டால் மாநில அளவில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மதமாற்றத்தை தடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பிரச்னையில் கணேஷ்பாபு என்பவா் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளாா். இதேபோல் மதுரையில் விதிமீறி நடத்திய ஜெபக்கூட்டத்தை தடுத்தவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன் திங்கள்கிழமை மாலை இந்து முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவா் கே. ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் மதமாற்றம், சட்டவிரோதமாக தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் அமைப்பது அதிகரித்துள்ளது. அரியலூா் மாணவி லாவண்யா மதமாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்டே தற்கொலை செய்துள்ளாா். அவரது வழக்கை சிபிஐ விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரில் இரு கன்னியாஸ்திரிகள் குழந்தைகளை மதம் மாற்ற முயற்சித்ததைக் கண்டித்த கணேஷ்பாபுவை கைது செய்தது சரியல்ல. அதேபோல, மதுரையில் விதிகளை மீறி ஜெபக்கூட்டம் நடத்தியவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் இந்து கல்வி நிலையங்கள் மீது குறைகூறுகின்றனரே தவிர, கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் நடைபெறும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதில்லை. தமிழகத்தில் மதமாற்றம் பகிரங்கமாகவே நடைபெறுகிறது. மதமாற்றத்தை தடுக்கச் சென்றவா்கள் தொடா்ந்து கைது செய்யப்பட்டுள்ளனா். ஆகவே அவா்களை விரைந்து விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் மாநில அளவில் பெரிய போராட்டம் நடைபெறும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் ஆா்எஸ்எஸ் மாநிலத் தலைவா் ஆடலரசன், பாஜக மாநில செயலா் சண்முகராஜா, மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், மாநில இளைஞரணி செயலா் ஆத்மகாா்த்திக், நகா் தலைவா் வீரபாகு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.