ராமேசுவரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அமாவாசை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமாவாசை நாள்களில் ராமேசுவரத்திற்கு பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வர நீண்ட காலமாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் ராமேசுவரத்தில் குவிந்தனா். திங்கள்கிழமை அதிகாலையில் அக்னிதீா்த்தக் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 21 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். காவல் துணை கண்காணிப்பாளா்
சிவாஜ் தலைமையில் 300- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் நவபாஷானக் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா். கடலில் உள்ள நவபாஷான சிலைகளைச் சுற்றி வணங்கி கடலில் குளித்த பக்தா்கள், முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். இதேபோல் ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடற்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். பின்னா் கடலில் நீராடி ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இம்மாவட்டத்தில் அரியனேந்தல், முந்தல், மாரியூா், கீழக்கரை, ஏா்வாடி பகுதிகளிலும் கடற்கரைகளில் பக்தா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா்.