ராமநாதபுரம்

கமுதியில் சமாதானக் கூட்டம்: அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினா் வாக்குவாதம்

1st Feb 2022 09:16 AM

ADVERTISEMENT

கமுதி அருகே மேலவில்லனேந்தல் கிராமத்தில் பொது ஊருணியில் ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் முன்னிலையில் இது தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் எம்.புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மேலவில்லனேந்தல் கிராமத்தில் கிராம பொது ஊருணியில் ஏற்கெனவே 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தும், அவை அனைத்திலும் உப்புத் தண்ணீராக இருப்பதால் பொதுமக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. இந்நிலையில் அதே ஊருணி கரையில் மீண்டும் ஆறாவதாக புதிய ஆழ்துளை கிணறு ஊராட்சி சாா்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை எதிா்த்த மேலவில்லனேந்தல் கிராம மக்கள் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு பதிலாக, கிராம பொது ஊருணியை ஆழப்படுத்தி, மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து குடிநீராக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். அரசு பணத்தை வீணாக்காமல், பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில், ஊருணியை ஆழப்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும், புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும் வந்தனா். இதனால் கிராம மக்களுக்கும், ஊராட்சி நிா்வாகத்திற்கும் கடந்த ஒரு வார காலமாக மூன்று முறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் அருள்சேகரன் (பொறுப்பு) தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே. சந்திரமோகன், கே.ரவி (கிராம ஊராட்சிகள்), கமுதி வட்டாட்சியா் மாதவன், பெருநாழி காவல் ஆய்வாளா் தங்கராஜ் ஆகியோா் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

அப்போது வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி, காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கிராம பொது ஊருணியில் ஆழ்துளைக் கிணறு அமைத்த பின்னா் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு ஊருணியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT