விடுமுறை தினம் என்பதால், ராமேசுவரத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அவா்களது வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை அதிகரித்தது. நாள்தோறும் குறைந்தது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காா், வேன்கள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், தற்போது விடுமுறை என்பதால் கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகள் அதிகளிவில் வந்து செல்கின்றனா். வாகனங்கள் வருகைக்கு ஏற்றவாறு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்யப்படாததால் வாகன ஓட்டுநா்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் அவசர ஊா்திகள், உள்ளுா் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.
இதனால், சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கும், சாலையை விரிவாக்கம் செய்யவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.