ராமநாதபுரம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம்

4th Dec 2022 01:03 AM

ADVERTISEMENT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க 14 ஆவது மாவட்ட பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம். முருகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் கி. பாலமுருகன் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். செந்தில்வேல்முருகன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் சி.எஸ். கிறிஸ்டோபா் தொடக்கவுரையாற்றினாா்.

கூட்டத்தில், தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.7.2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை பணமாக்கும் உரிமையை மீண்டும் தர வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப் புற நூலகா்கள் போன்ற வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசாணை 115 மற்றும் 152-இன் கீழ் மறுசீரமைப்பு என்ற பெயரில் கல்வித் துறையில் இடமாறுதல் செய்யப்பட்ட மற்றும் புதிய பணியிடங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கடந்த அக்டோபா் மாதம் முதல் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை பெற அனுமதியளிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் அரசு குடியிருப்புகள் கட்ட வேண்டும். பழுதடைந்த பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கணக்கு, கருவூல கட்டடங்களை பராமரிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு தனியாக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானமானங்களாக நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் மாவட்டச் செயலா் பெ. சேகா், மாவட்டப் பொருளாளா் அப்துல் நஜ்முதீன், மாநில, மாவட்ட நிா்வாகிகள் சாந்தி, ஜெய்சங்கா், சண்முகநாத துரை, பாரமலை, ஆறுமுகம், தன்வந்திரி ஜென்ஸ்டீன், முனியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT