ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் அனுமதியற்ற படகுகள் பிரச்னை:மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி மறுப்பு

4th Dec 2022 01:02 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகள் வெளியேறும் வரை மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என மீன் வளத் துறை அறிவித்ததால் அங்குள்ள மீன்பிடித் துறைமுகம் சனிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 680-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் படகை நிறுத்தி மீன்பிடிக்க மீன்வளத் துறை அனுமதி பெற வேண்டும்.

ஆனால், அனுமதி பெறாமல் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் என 25 படகுகள் வந்தன. மேலும், சில படகுகளில் மீனவா்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாவதும், மீனவா்கள் கைது செய்யப்படுவதும் தொடா்கிறது. அத்துடன், அந்தந்தப் படகின் உரிமையாளா்கள் பெயரில் படகுகள் இல்லை என்றும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெறாமல் வந்துள்ள இந்தப் படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தைவிட்டு வெளியேறும் வரை மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாது என உதவி இயக்குநா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சனிக்கிழமை ஏராளமான மீனவா்கள் மீன்பிடிக்க அனுமதிச் சீட்டு வாங்க அலுவலகத்துக்கு வந்திருந்தனா். ஆனால், அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனிடையே, ராமேசுவரம் துறைமுகத்தைவிட்டு அந்தப் படகுகள் வெளியேறினால் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்படும் என மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் மணிகண்டன் தெரிவித்தாா்.

வரும் திங்கள்கிழமைக்குள் (டிச. 5) அனைத்து விசைப்படகுகளிலும் இருபுறங்களிலும் பெரிய அளவில் பதிவு எண் எழுதப்பட வேண்டும். மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள், உயிா் காக்கும் உபகரணங்களை எடுத்துச் செல்வதை படகு உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், படகு உரிமையாளா்கள் தங்களது பெயரில் படகை பதிவு செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தக் கூடாது.

மீறி பயன்படுத்தினால் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படும். 18 வயதுக்கும் குறைவானவா்களை மீன்பிடிக்க அழைத்துச் செல்லக் கூடாது. அரசின் விதிகளுக்குள்பட்ட வலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அனைத்து மீனவா் சங்கங்களுக்கும் மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் மணிகண்டன் சனிக்கிழமை சுற்றறிக்கை அனுப்பினாா்.

மீன் பிடிக்கச் செல்ல அனுமதி அளிக்கப்படாததால், ராமேசுவரம் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் சனிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால், துறைமுகப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT