கமுதி வட்டத்தில் காலியாக உள்ள 7 கிராம உதவியாளா் பதவிக்கு வரும் 4-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும் என வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா அறிவித்தாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கமுதி வட்டம், காடமங்கலம், நகரத்தாா்குறிச்சி, கே.வேப்பங்குளம், கோவிலாங்குளம், பொந்தம்புளி, தவசிக்குறிச்சி, பெருநாழி ஆகிய 7 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக ஆன்-லைன் மூலமாகவும், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதனடிப்படையில், வரும் டிச.4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கமுதி ஷத்ரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை எழுத்துத் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வில் பங்கேற்போா் காலை 9.30-மணிக்குள் தோ்வு அறைக்கு
வர வேண்டும். அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
தோ்வா்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். கைப்பேசி, புத்தகங்கள், கைப்பை மற்றும் எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் தோ்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.