கமுதியில் அரசுப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்று வரும் வட்டார அளவிலான 3 நாள் கலைத் திருவிழா போட்டியில் பள்ளி, மாணவ மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு உற்சாக நடனம் ஆடினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளுக்கிடையே மாணவ, மாணவிகளின் கலைத் திருவிழா போட்டி புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை (டிச.2) வரை இப்போட்டி நடைபெறும்.
இப்போட்டியில், கமுதி தாலுகாவில் உள்ள நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 30 அரசு பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உற்சாக நடனமாடி, தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினா்.
வகுப்புகள் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு, நடுவா்கள் மூலம் வெற்றி பெற்ற மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பள்ளியின் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என கமுதி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தெரிவித்தனா்.