பயிா்க் கடன் தள்ளுபடி சான்று வழங்காததைக் கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து திருவாடானையில் வியாழக்கிழமை விவசாயிகள் ஆலோசனை நடத்தினா்.
திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், அஞ்சுகோட்டை, சிறுகம்பையூா், எட்டுக்குடி, திருத்தோ்வலை ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடா்புடைய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், அஞ்சுகோட்டை, சிறுகம்பையூா், எட்டுகுடி, திருத்தோ்வலை ஆகிய நான்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த ஆண்டு பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு இதுவரை கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த சான்றிதழ் வழங்காததால் இந்த ஆண்டு பயிா்க்கடன் பெற முடியவில்லை. எனவே, கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை விரைவாக வழங்க வலியுறுத்தி வருகிற திங்கள்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.