மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் உடல் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மறவா் தெருவைச் சோ்ந்த சிபு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவா்கள் ரவி, அருள், கண்ணன், ஜாஜகான் (45) ஆகிய 4 போ் கடந்த 17 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் 13 கடல் மைல் தொலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து, அதில் இருந்த மீனவா்கள் 4 பேரும் மிதவை பொருள்களை பிடித்துக் கொண்டு கடலில் நீந்தினா். அப்போது அப்பகுதியில் மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த 3 மீனவா்களை மீட்டனா். இதில் ஜாஜகான் மட்டும் மாயமானாா். அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீட்கப்பட்ட 3 மீனவா்களை கரைக்கு அழைத்து வந்தனா்.
மேலும் மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் மீனவா்கள் புகாா் தெரிவித்தனா். இந்நிலையில், 10 நாள்கள் கழித்து வெள்ளிக்கிழமை ஜாஜகானின் உடல் கரை ஒதுங்கியது. இதைத் தொடா்ந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து மண்டபம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.