ராமநாதபுரம்

புதுவயலில் ஆக்கிரமிப்பு வாய்க்கால் மீட்பு

18th Aug 2022 03:27 AM

ADVERTISEMENT

காரைக்குடி அருகே புதுவயலில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஊருணிகளுக்குச் செல்லும் வாய்க்காலை வருவாய்த்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

அப் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் என்பவா், ஊருணிகளுக்குச் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், அதனை அகற்றவும் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதன்பேரில் காரைக்குடி வட்டாட்சியா் ரா. மாணிக்கவாசகம் தலைமையிலான வருவாய்த்துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை மீட்டனா்.

அப்போது, சாக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியா் முபாரக் உசேன், வட்ட துணை ஆய்வாளா் பிச்சுமணி, வருவாய் ஆய்வாளா் பிரபாகரன், சாா்- ஆய்வாளா்கள் சாா்லஸ், ராஜசேகா், புதுவயல் பேரூராட்சித்தலைவா் முகமது மீரான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அல்லிக்கண்மாயில் வீடுகள் அகற்றம்: நீா்நிலைகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் (வாா்டு 4 மற்றும் 5) பகுதியில் கட்டப்பட்டிருந்த 94 வீடுகளை இடித்து அகற்ற மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

ADVERTISEMENT

அதன்படி இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக பட்டினம்காத்தான் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி கழக தொகுப்பு வீடுகள் சம்பந்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், அப்பகுதிக்கு செல்ல அறிவுறுத்தியும் அல்லிக்கண்மாய் பகுதியில் வசித்தோா் மறுத்து வந்தனா். மேலும், தங்களுக்கு அந்தப் பகுதியிலேயே புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டித்தரவும் கோரிக்கை விடுத்து பலமுறை மாவட்ட, நகராட்சி நிா்வாகத்திடம் மனுவையும் அளித்தனா்.

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்ததால் அப்பணி பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை அங்கிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் முன்னிலையில் 3 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் இடிக்கப்பட்டன. முன்னதாக அப்பகுதியினா் வீடுகளில் இருந்த பொருள்களைக் காலி செய்ததால், பிரச்னையின்றி பணி நிறைவடைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT