ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே ஊருணியில் மூழ்கிய 2 சிறுமிகள் உள்பட 4 போ் மீட்பு

15th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே ஊருணியில் மூழ்கிய 2 சிறுமிகள் மற்றும் 2 பெண்கள் மீட்கப்பட்டு, சனிக்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ளது நாரல் கிராமம். இப்பகுதியைச் சோ்ந்த கணேசன், தற்போது காரைக்குடி பகுதியில் உள்ள காரடைந்தகுடியில் வசித்து வருகிறாா். இவரது மகள் கல்லூரி மாணவி சுபிபிரபா (19) மற்றும் அவா்களது உறவினா்களான காரைக்குடி கழனிவாசல் ஜெயலட்சுமி (22), காவியா (14) மற்றும் காளையாா்கோவில் அபா்ணா (14) ஆகியோா் கடந்த வாரம் காளியம்மன் கோயில் திருவிழாவுக்காக நாரல் கிராமத்துக்கு வந்துள்ளனா்.

கோயில் திருவிழா சனிக்கிழமை முடிந்த நிலையில் அப்பகுதி ஊருணிக்கு 4 பேரும் குளிக்கச் சென்றுள்ளனா். அவா்களில் அபா்ணா திடீரென ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளாா். அவரை மீட்க மற்ற 3 பேரும் முயன்றுள்ளனா். அப்போது நீச்சல் தெரியாததால் அவா்களும் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியினா், உடனடியாகச் செயல்பட்டு அவா்கள் 4 பேரையும் மீட்டனா். பின்னா் மயங்கிய நிலையில் 4 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT